நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்

பேராசிரியர் முனைவர். காவ்யா சண்முகசுந்தரம்

  • காவ்யா சண்முகசுந்தரம் திருநெல்வேலி மாவட்டத்தில் கால்கரை கிராமத்தில் 1949 டிசம்பர் 30-ல் திரு. வெ. சுடலைமுத்துத் தேவருக்கும் திருமதி இசக்கியம்மாளுக்கும் எட்டு பிள்ளைகளில் மூத்த மகனாகப் பிறந்தவர். கால்கரை ஆரம்பப் பள்ளியிலும் வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர். இவர் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியமும் கற்றவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1977-ல் முனைவர் பட்டத்தை 'திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அமைப்பு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து பெற்றவர். 1978 முதல் பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேராசியராகப் பணியாற்றி 2006-ல் விருப்ப ஓய்வு பெற்று தற்போது சென்னையில் வசித்து வருகிறார். 2006-2008 வரை முதுநிலை ஆய்வாளராக 'நாட்டுப்புற அரங்கியலைப் பற்றியும் 2008-2009 வரை செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில் 'காலந்தோறும் கண்ணகி கதைகள்' என்ற தலைப்பில் சிற்றாய்வும் 2008-2011 வரை 'நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்' என்ற தலைப்பில் பேராய்வும் (யுஜிசி மேஜர் புராஜக்ட்) செய்தவர். 2012-14 வரை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியராக நெல்லை நாட்டுப்புறக் கலைகளைபற்றி ஆய்வு புரிந்தவர்.
  • 1981-ல் 'பகல் கனவுகள்' என்ற முதல் கவிதை நூலையும், 1972-ல் 'கதம்பம்' என்ற முதல் கவிதைத் தொகுதியைப் பச்சையப்பன் கல்லூரி விடுதியிலிருந்தும், 1975-ல் 'நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம்' என்ற முதல் ஆய்வு நூலை இலக்கிய மாணவர் வெளியீடாகவும், 1982-ல் 'கன்னடியர் மகள்' என்ற முதல் நாவலையும், 1995-ல் 'களவு' என்ற முதல் சிறுகதைத் தொகுதியையும் 1998-ல் 'அக்னி' என்ற முதல் நாடக நூலையும் காவ்யா வெளியிட்டுள்ளது. இவரது ஆய்வு நூல்களைப் பூம்புகார் பதிப்பகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், சாகித்ய அகாதெமியும் வெளியிட்டுள்ளன.
  • 1995 முதல் 2005 வரை 'தன்னனானே' என்ற நாட்டுப்புற இதழை நடத்தியவர். 'Folkeore' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'நாட்டுப்புறவியல்' என்ற சொல்லாக்கத்தை 1973-ல் உருவாக்கியதோடு 30 நூல்களையும் எழுதியுள்ளார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளும், ஐந்து நாவல்களும், 30 ஆய்வு நூல்களும், தமிழ் சினிமா, தமிழ் இலக்கியம் தொடர்பாக எழுதியுள்ளார். இவரது படைப்பு ஆங்கிலம், கன்னடம், மலையாளம், வங்காளம் எனப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.
  • தமிழ்நாடு அரசு பரிசுகளை 3 முறை பெற்றதோடு (2010 வரை) திருப்பூர் தமிழ்ச் சங்கம், திருப்பூர் இலக்கியப் பேரவை, கோவை லில்லிதேவசிகாமணி பரிசு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றிலிருந்து பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.
  • தில்லி சாகித்ய அகாதெமியில் 5 ஆண்டுகள் ஆலோசனை குழு உறுப்பினராகவும், சென்னை குறள் பீடத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர். தற்போது தமிழ் சினிமா வரலாற்றையும், நெல்லைக் கலைக் களஞ்சியத்தையும், முக்குலத்தோர் களஞ்சியத்தையும் உருவாக்கி வருகிறார். சாப்ட்வேர் என்ஜினியர் மகனும் (முத்துக்குமார்) மருமகளும் (சிந்தியா) மருத்துவரான மகளும் (காவ்யா) மருமகனும் (கார்த்திக்) பேரன் ஆகாஷ் பேத்திகள் ரித்தன்யா, ஷாண்மி மற்றும் பாதியும், மீதியும், 'காவ்யா'வின் ஆதியும், இவரது மனைவியும் துணைவியுமான முத்துலட்சுமி என அளவான குடும்பம் இவருடையது.